Always Welcome !!! We are Always With u !!! Question About this blog doubts, share u r ideas

Sunday 26 February 2017

சீமைக்கருவேலம் மரங்களை அழிப்போம், மண்ணின் வளம் காப்போம்


சீமைக்கருவேலம் மரங்களை அழிப்போம், மண்ணின் வளம் காப்போம். 
 

          பல்வேறு இடங்களில் புயலில், நுாற்றாண்டு கண்ட மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், சீமைக்கருவேல மரங்கள், எந்த பாதிப்பும் இன்றி, நிலை கொண்டிருப்பது, அவற்றின் தன்மையை உணர்த்துகிறது.

            விவசாயத்திற்கும், நிலத்தடி நீருக்கும் பல வகைகளில் தீங்கு விளைவிக்கும் இம்மரங்களை அழிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2017 புத்தாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என, மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

டிசம்பர், 12ம் தேதி, 'வர்தா' புயலின் சூறைக்காற்றில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், நுாற்றாண்டுகள் கண்ட பழைமை வாய்ந்த, பல வகையான மரங்களும், வேரோடு விழுந்தன. இதனால், மாவட்டம், பசுமை இழந்து, வறண்டு கிடக்கிறது.

மரங்கள் குறைந்துள்ளதால், குளிர் மற்றும் வெயில் போன்றவற்றின் தாக்கம் அதிகளவு இருக்கும் என்றும், மழையளவு குறையும் அபாயம் இருப்பதாகவும், சூழல் மாசு ஏற்படும் என்றும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர். இதைத் தடுக்கும் விதமாக, பல இடங்களில், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் புதிய மரக்கன்றுகளை நடும் பணியைத் துவங்கியுள்ளன.
மேலும் சில இடங்களில், விழுந்த மரங்களை மீண்டும் நடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மரங்கள் இன்றி, வறண்ட பூமியாக காட்சியளிக்கும் பகுதிகள், பசுமைப் பூஞ்சோலையாக மாறுவது எப்போது என, அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

மிகப் பெரிய மரங்களும், ஆழமான வேர் கொண்டவை என, கருதி இருந்த மரங்களும், அடியோடு சரிந்த நிலையில், முட்செடிகள் என அழைக்கப்படும் சீமைக் கருவேல மரங்கள், புயலையும் தாங்கி நின்றுக் கொண்டிருக்கின்றன.

இதன் மூலம், இவற்றின் வேரின் ஆழத்தை அறிய முடிகிறது. கடந்த நுாற்றாண்டில், விறகுக்காகவும், வேலிக்காகவும், வெளி நாடுகளில் இருந்து சீமைக் கருவேல மரங்கள் கொண்டு வரப்பட்டன. சமையல் எரிவாயு பெரிதளவில் பயன்பாட்டிற்கு வராத காலத்தில், மக்கள் இம்மரங்களை வெட்டி, விறகாக பயன்படுத்தி வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர் நிலைகளிலும், காலி மனைகளிலும், தரிசு நிலங்களிலும், இம்மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மனித முயற்சி இல்லாமல், பறவைகள் மற்றும் விலங்குகளின் எச்சத்தால், பரவும் சீமைக் கருவேல மரங்களால், மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இம்மரங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்வதால், நிலத்தடி நீரை நம்பி இருக்கும் விவசாயிகள் நிலை கேள்விக் குறியாகி உள்ளது. நிலத்திற்கும், நீருக்கும், விவசாயத்திற்கும் பெருமளவு கேடு விளைவிக்கும் இம்மரங்களை தடை செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றின் ஈரப்பசை உறிஞ்சப்படுகிறது
சீமைக்கருவேல மரத்தின் வேரானது, 53 மீட்டருக்கும் மேல் (175 அடி) ஆழம் செல்லக்கூடியது. இம்மரம், எந்த சூழலிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாத நாட்களில், நிலத்தடி நீரையும், காற்றிலுள்ள ஈரப்பசையையும் உறிஞ்சி, உயிர் வாழ்கிறது. மேலும், இத்தாவரம் உள்ள இடத்தில், ஒரு வித நச்சுத்தன்மை இருப்பதால், பிற தாவரங்களை வளர விடுவதில்லை.

என்ன செய்யலாம்?
    விவசாயிகள் நிலத்தை காலியாக விடாமல், ஏதேனும் பயிரிடுவதன் மூலம், சீமைக் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்கலாம்

  சீமைக் கருவேல மரங்கள் வளர்வதை, ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டும்

    மக்களிடையே, சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி மாணவர்களுக்கும் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும்

     இந்த மரங்களை அழிப்பதற்கென தனி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொன்மை வாய்ந்த மரங்களை வீழ்த்திய புயல், சீமைக் கருவேல மரங்களை மட்டும் விட்டுச் சென்றது. இவற்றால், மண் வளம் கெடுவதோடு, நிலத்தடி நீரும் பாழாகிறது. இவற்றை ஒழிக்க நடவடிக்கை தேவை. புது ஆண்டு பிறக்கிறது; இந்த ஆண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.

News  |   Senpagavalli Safe Team @ Gopi   |  

No comments:

Post a Comment